Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Monday, September 26, 2011

இதுவும் அதுவும்

அது இதுவாகவும்
இது அதுவாகவும்
மாறியதால் எந்த
பயனும் இல்லை
இதுவும் அதுவும்
பயமுறுத்தத் தான் செய்கிறது
பயமுறுத்தத் தான் செய்யும்
அதுவும் இதுவும் கூட

சில சமயம்
அது அதுவாகவே இருந்ததால்
பயனற்று நிற்கிறது
காலக் கரையான்களால்
களவாடப்பட்டு !

அது இதுவாக மாறியதால்
இங்கே சில சுவாசிக்கிறது
வரலாறு மறந்து !

எத்தனையோ இதுவும் அதுவும்
நெஞ்சில் புரள்கிறது
யாருக்கும் தெரியாமல் !!

Thursday, September 15, 2011

சுழல்

சுழலில் சிக்கி
சுவாசம் திணறி
கண் இருண்டு
கால் நழுவி
உறவுகள் அறுந்து
தனியாய் தவிப்புடன்
தத்தளிக்கிறேன்

நெஞ்சம் வலித்து வெடிக்கும்
எண்ணில்லா எண்ணங்களால் !
நித்திரையும் விடைப்பெற்றதால்
நேரம் நீண்ட நோவு
நேசக் கரம் வேண்டி
நாள் தோறும் நடக்கும் நோன்பு

உறவுகள் புதிரானது
விடைகள் தேவையற்றது
மனிதத்தை அளப்பதும் மனிதமே
தானியங்கி மனிதர்கள்
இயல் மாறுவது போல் தெரியும்
மாறுவது உண்மை
உணர்ந்தால் மனம் மவுனமாகும்

தாயே வருவாயா
பரிதவிப்பு புரிகிறதா?
குருதிக்கொதிப்பது எதனால்
மனக்கடலின் எண்ண அலைகள்
கரைக்கடந்ததா
மணிக்கனக்கில்
நிற்காமல் கசிகிறதே

நான் நடத்தும் இப்போரில்
என் உள்ளமெல்லாம் காயம்
காவியத்தை தொலைத்த
கவிஞனின் சிந்தையாய் நான்
இது பெருங்காயம்

காதல் கொடுமையானது
இலக்கியங்கள் மலரைப் பாடும்
முள்ளை மறைத்து விடும்
மனக்கிழியலை பதப்படுத்தி
படைப்பாக்கிய பிரம்மன் உண்டோ?

கண்முன்னே அவளை நிறுத்தி
மறக்க முயல்கிறேன்
இப்போரில் மீண்டும் மீண்டும்
வீழ்கிறேன்
மீண்டும் மீண்டும் போரும்
தொடுக்கிறேன்

படுத்த வந்த மோகினியே
உன் ஒவ்வொரு செயலும்
பாதிக்கிறது
என் உள்ளமெல்லாம் காயம்
இது எனக்குப் போர்

என் வழியில் விடுங்கள்
என் வழி எது?
சாலை இரண்டாய் இருக்கக்கூடாதா
இருவருக்கும்?
இந்த குழியில் ஏன்
புதைத்தாய்?
இங்கிருந்து பிய்த்து
திக்கற்ற புது வெளியில்
புதைத்துவிடு தேவனே !

பொறுமையில்லாமல் புத்தகத்தின்
முடிவுரை தேடுகிறேன் !
பொறுக்க முடியாமல் முடிவுரை
எழுதுவேன்
முகவரியில்லா தேசத்தில் !!

Wednesday, September 14, 2011

மற்றவர்கள் சொன்னது

கடல்
முத்தெடுக்கலாம்
மீனெடுக்கலாம்
முயற்சியைப் பொறுத்து
புதையலுடனும் வரலாம்
கால் நனைத்தும் வரலாம்

அன்பு
உனக்காக
மலரிலிருந்து நறுமணத்தையோ
ஞாயிற்றிலிருந்து இளஞ்சூட்டையோ
திங்களின் பாலொளியையோ
பிரிக்கவியலாத நானா
என் ஆன்மாவை பகிராமல்
என்னிதயத்தில் நுழைய
உன்னை அனுமதிப்பேன்?
Heather o Hara

எதிரொலி
மலைத்தொடர் தன்னுள் கொண்ட தொடரொலியாக
என்னுள்ளமுறையும் உன் வார்த்தைகள்
- Rumi

மதம் (அ) அன்பிற்குண்டோ அடைக்குந்தாழ்?
எல்லா மதங்களிலும் அன்பிருக்கிறது
மதத்திற்கோ அன்பில்லை
- Rumi

Tuesday, September 13, 2011

வெயில்

வந்த வேகத்தில் வாசலுக்கு ஓடினான்
கைநிறைய அள்ளி வந்த வெயில்
தொலைந்து விட்ட சோகத்தில்

அன்று முற்றம் வழியாக
தரையில் படர்ந்த வெயில்
மெதுவாய் அறையில்
எதையோ துழாவியது

பிறிதொரு நாள்
எங்கோ ஒளிந்திருந்த
கண்ணாடித்துண்டுகள் விழுங்கி
சுவரில் துப்பிய வட்டவட்ட
வெயிலின் மிச்சத்தை
இருவிரல்களால்
பொறுக்கி கொண்டிருந்தான்

சிறுவயதில்
ஓலைக்குடிசையில்
பலமுறை படுத்திருக்கிறேன்
யாரோ அள்ளித்தெறித்த
வெயில் நட்சத்திரங்களின் மேல்

உருளையாய் வானிலிருந்து
வெளிச்ச கயிறுகள்
கூரையைக் கிழித்து தொங்கும்
தூசிகளை துலக்கி
அறையை சுத்தமாக்கும் போல

அண்ணாந்துப் பார்த்தால்
யாரோ அப்பளமாய்
நொறுக்கிப் போட்ட
வானம்
கூரை மேல்!

Monday, September 12, 2011

இருவர் செல்லும் பாதையில் ஒருவர் பயணித்தால்….

வாழ்க்கை என்ன வறண்ட பக்கங்களின்
காய்ந்த மைத்துளிகளா?
வண்ணமயமான மலரிலைகளை பருவக்காற்றுக்கு
தாரைவார்த்த மரங்களா?

உள்ளங்கள் புரியாது கட்டிக்குலாவி காதல் பழகி
ஒவ்வொருநாளும் வாழ நாம் புள்ளினமா?
உணர்ந்து கொள்ளாமல் ஒவ்வொரு நொடியையும்
சோகத்தில் நனைக்கும் மனித இனமே

எத்தனை முறை சொல்லிவிட்டேன் காதல் அளக்கவியலாது
அளவும் தெரியாது
எங்கோ எப்போதோ வெளிப்படுத்தாவிட்டால் என்காதல்
பொய்யோ? என்றால் எல்லாம் பொய்யே!

பாசம் நேசம் மோகம் நட்பு அன்பு காதல்
இவையெல்லாம் தேவையில்லையா வாழ்க்கைக்கு
பக்குவப்பட்ட மனதுக்கு இதைவேறுப்படுத்த
இயலுமா? இயலாமல் போனால் நான் சவமா?

உள்ளத்தின் நிறைவே உன்னதம் – முயன்று பார்
புரிந்துக் கொள்வாய்
உண்மையில் நீ உள்ளத்தில் இல்லையென்றால் நான்
நிறைவடைந்திருக்கப் போவதில்லை
அப்போது ஒருவேளை பலமுறை நான் உன்னை காதலிப்பதை
நினைவுப்படுத்தியிருப்பேன் !


Short Version:

வாழ்க்கை என்ன வறண்ட பக்கங்களின்
காய்ந்த மைத்துளிகளா?
வண்ணமயமான மலரிலைகளை பருவக்காற்றுக்கு
தாரைவார்த்த மரங்களா?

காதல் அளக்கவியலாது
அளவும் தெரியாதது
எங்கோ எப்போதோ வெளிப்படுத்தாவிட்டால் நம் காதல்
பொய்யோ? என்றால் எல்லாம் பொய்யே!

உள்ளத்தின் நிறை உன்னத நிலை
நீ இல்லையென்றால் நான்
நிறைவடைந்திருக்கப் போவதில்லை
உன்னைக் காதலிப்பதை பலமுறை
நினைவுப்படுத்தியிருப்பேன் அப்போது !

Tuesday, September 06, 2011

நிலாவிலும் நண்பன் வேண்டும்

பார்க்கும் பூமியில் பரவலாய் போர்
பிளவுகள் கசிவுகள் கனவுகளில் அச்சுறுத்தும்
கணைகளும் குண்டுகளும் காலத்தை சிதைக்கும்
கண்ணுக்கெட்டியத் தொலைவுவரை மருந்துக்கும் நட்பில்லை

பெண்ணாலே இல்லை பொன்னாலே
மண்ணாலே இல்லை மதிப்பாலே
மானுடம் பிரிந்து நின்றால்
பிறப்பாலே வந்ததின் பயனென்ன?

அழைத்துப் பார்க்கிறேன் அனைவரையும் என்னகத்திற்கு
அங்கே ஆண்டவனும் அன்பாய் அரட்டையிலிருப்பான்
அனைவரின் முகத்திலும் தவழும் புன்னகை
அகிலத்தையே துறந்து அங்கு குடியேறியதோ?

இதயத்தின் ஆட்சி தன்னிழல் செலுத்தும்
இதனால் உணர்வுகள் மதிக்கப் படுகின்றன
அறிவிற்கு ஓய்வுவிட்டு இதயத்தால் வாழுங்கள்
அதிசயமாய் உம்வயதும் அதிகரிப்ப துணர்வீர்
எனக்கு நண்பர்கள் அதிகம் தான்
ஒவ்வொரு பார்வையிலும் நட்பை பிரசவித்திருக்கிறேன்
எனக்குள் ஓய்வெடுக்க பலர் வருவதுண்டு
ஒய்யாரமாய் ஓர்கட்டிலும் மயிலிறகு விசிறியும் உண்டு

இரகசியம் கூறுகிறேன் மந்திரமாய் மாற்றிவிடு
மண்ணிலே பயன்படுத்தி மற்றவரை உன்பக்கமிழு
இனிப்பான புன்னகையை உதட்டோரம் ஒட்டிவை
மனதை திறந்ததில் மகிழ்ச்சியை பூட்டிவை

சுயநல சித்தாந்தத்தை சிலகாலம் தள்ளிவை
சிலர் செய்யும் தவற்றை அப்போதே மறந்துவை
பேசி சிரிக்க சிலபொழுதை தினம் ஒதுக்கு
பக்கமுள்ளோர் எல்லாம் நீயென நினைத்தொழுகு

எல்லையில்லா நீளமடா வாழுங் காலக்கயிறு
எங்கோ உள்ள முடிச்சடா உன்காலம் அதில்
கையளவு நேரத்துக்குள் கடலளவு கொதிப்பேன்?
மயானம் செல்கையில் போற்றுவோரில் குறைவுமேன்?

நிலவுக்கு அரசனாக்கி அமரச்சொன்னான் இறைவன்
நின்றுப் பார்க்கிறேன் நிலாவிலிருந்து பூமியை
நல்லக் காற்றில்லை நன்னீருப்பதாய் தெரியவில்லை
நான் சகித்துக் கொள்வேன் எனினும் நண்பனின் மடியில்லை

தோள் சாய தோழனைத் தேடுகிறேன்
இலக்கியங்கள் கனவுகளில் மகிழ்ச்சியூட்டும்
தோழனைப் போல் நினைவுகளில் அல்ல
இதனால் சோர்ந்து நான் பூமி வந்து சேர்ந்தேன்

மனங்களே சிறிது புரிந்துக் கொள்ளுங்கள்
பூமி நாம் மகிழ்ச்சியாய் வாழத்தான்
பூமியும் முறுவலிக்கும் நம் மகிழ்ச்சியில்
மகிழ்ச்சியை வெளிப்படுத்த மகிழ்ச்சி பெருகும் பரவும்

முகம் நகவும் அகம் நனையவும்
மலர் மதியும் நேசக் கரமும்
அரவணைக்கட்டும் நல்ல நட்பை
இரு செவியும் தனி நாக்கும்
தேவைகள் குறைக்கட்டும்
பிறர் நலம் பேணட்டும்
தனிமையும் தற்சிந்தனையும் அழியட்டும்
பிளவுகளும் கசிவுகளும் ஒழியட்டும்
பூமியின் கும்மாள கொண்டாட்டங்கள்
நிலவிலும் எதிரொலிக்கட்டும்

Monday, September 05, 2011

என் பேர் வீடு

காணி நிலத்திலே காய்கனி கூட்டத்திலே
காலூன்றிய கருங்கல் கட்டடம் அல்ல நான்
நினைவுகளை தலைமுறைகளாக பதப்படுத்திய பெட்டகம்
நாள்தோறும் சொந்தங்களில் தோய்ந்தெழும் சிறுதவம்

நான் வீடா? குடும்பமா?
என் பெயர் வீடு

நானொரு அரசாட்சி பாரம்பரியம் என் நீதி
சமூகத்தை பிரசவிக்கிறேன் சரித்திரத்தை இயற்றுகிறேன்
நீவிர் புரியாமல் தவிக்கும் மறைப்பொருள் நான்
சந்தத்தில் (இல்லை சொந்தத்தில்) இணைந்த சிறு சங்கதி நான்

நான் யார்?
என் பேர் வீடு

பூமித்தாயின் தலைப்புதல்வி நாகரிகத்தின் அளவுகோல்
பூத்துகுலுங்கும் செடிகொடிகள் அணிகலன் அங்கே
தவழும் மழலைகள் எம் குழந்தைகள்
தவறாமல் தாலாட்டி கனவுகளை விதைக்கிறேன்

நான் வீடா? தாயா?
என் பேர் வீடு

நான் தாயின் கண்ணீர் தளும்பிய அன்பு
தந்தையின் சுமை தளராத திடம்
தலைவனின் தூய்மை மறவனின் மாண்பு
நன்மக்களின் பேருறவு மொத்ததில் கோயில்

நான் யார்?
என் பேர் வீடு

கோடையில் கொல்லையிலும் திருவிழா சடங்குகளிலும்
கூட்டமாய் குதூகலிப்புடன் கும்மாளமிடுகிறேன்
கொண்டாட்ட பூரிப்பில் வசந்த கால தருக்களை மிஞ்சுகிறேன்
கருவறைக் குழந்தைக்கும் மனிதத்தை ஊட்டுகிறேன்

நான் பேருவகையின் மொத்த உருவமா?
என் பேர் வீடு

குடும்பத்தில் நான் பாதி; நீங்கள் மீதி;
தைதோறும் தோரணம் கட்டி திகழ்கிறேன்
கார்த்திகையில் ஒளியேந்தி நிற்கிறேன்
தப்பாது சித்திரையில் உம்மை வாழ்த்துகிறேன்

நான் மூப்பில்லா மூதாதை
என் பேர் வீடு

வித்தகரும் வெளியேறாத பல்கலைக்கழகம் நான்
அத்தனை செயல்களின் மொத்த பட்டறை நான்
ஏதோ ஒன்று என்னுள்ளம் அரிக்கிறது
என் வயதை சொல்கிறது தலைமுறை இடைவெளி யென்கிறது

கட்டில் பிரியா முதிர்கிழம் வாசலிலே
முற்றத்தில் முடைந்து கிடக்கும் தந்தை
சிங்கார நகரத்திலே செல்வத்திற்கு சென்ற சின்னப்பிள்ளை
சிகாகோ சென்றவனோ அவனுடைய பிள்ளை

தலைமுறைகள் ஏனோ திசைக்கொருவராய்
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி கடல் கடந்து விட்டது வாரிசுகள்
தலைமேற் கொண்ட சுமையால் வீடு வந்து வருடங்கள் ஆயிற்று
களிப்பிற்கு செல்வமீட்ட சென்றவர்கள் நிறைவிழந்து களைத்து விட்டார்கள்

சாதிக்க சென்ற திசை ஒரு வழி பாதையா?
தத்தம் மைந்தரை எதிர்நோக்கி பெற்றவர்கள்
மொத்தக் குடும்பத்தைப் ஒன்றாகப் பார்க்கத் துடிப்பதோ
காலத்தால் காரை விழுந்த பழைய கட்டடம்

வருவாயா என் செல்வங்களே
என விசும்பும்
நான் யார்?
கட்டடமா? வீடா?

இழுத்துப் போட்ட மழை

கவிதைத் தவிர்த்த நேரத்தில்
கம்பியாய் நீர்க்கணைகள் எறிந்து
நிலத்தை ஈரப்படுத்தி விட்டது
வானம்

இலக்கற்ற பயணத்தில் ஆடி ஒதுங்கி
கலங்கி குலுங்கி கவிழ்ந்தே விட்டது காகிதக்கப்பல்
தெறிப்பது நீர்த்திவலை மட்டுமல்ல தவிப்பும் மகிழ்ச்சியுந்தான்
நிமிர்த்தி செலுத்த பாயும் கால்களை
யாரோ போட்டிருந்த உத்தரவு கட்டியிருந்தது

தெருவிலிருந்து அவசரமாய் கதவிடுக்கு வழி
நுழைகிறது ஓர் சாலைப்பூச்சி
செடிமரம் விளக்குத்தூண் எல்லாம் தலையுலர்த்த
தேடுகிறது கொடியில் நனையும் சிவப்பு துண்டுகளை

நனைந்த உலகின் அத்தனையும் ஏளனமாய் பார்க்கிறது
வீட்டு கண்ணாடி சாளரத்தில் பூமிபார்கும் என்னை

எம்வீட்டு புறக்கடை வழியாக
விரித்த தம்பிஞ்சுக்கரம் கொண்டு
உள்ளே இழுத்துப்போட்டான் மழையை
உற்சாகமாய் இரண்டு வயது பாலகன்

Friday, September 02, 2011

கற்றுக்கொண்டவை.....

அவள் கற்பூரம்
காதலில் கரைந்து
என்னுள்ளத்தில் வழிந்தாள்
உணர்ச்சித் திணறலில்
என் தனித்துவம் உருகியது
காதல் வெளியில் யாமும் கலவ
நாம் பிறந்தது பரந்து விரிந்தது

மழைத்தூறலை நூற்று
தென்றலுக்குப் போர்த்த சென்றால்
பனித்துளிக்குள் படுத்திருக்கிறாள்
பகலவன் சீண்டுவதற்குள்
நிலவிலே சேர்க்க வேண்டும்
சிணுங்கும் போது தாலட்டிட
வண்ணத்துப்பூச்சி ஒரு கோடி வேண்டும்!

அவள் கரம்பிடித்து கடற்கரையில் நடந்தால்
ஆயிரமாயிரம் மீன்கள் துள்ளி எம்மைப் படம்பிடிக்கும்
நிலவும் தூரம்விட்டு எம்மை தொடரும்
மணலேந்திய தடங்களை நீரும் காற்றும் முத்தமிடும்
இமைக்காது இரசிக்கும் அனைத்து தேவதைகளும்
இதழ்கள் இணைந்தால் அமுதும் சொரிவர்
நாழியும் பிரமையில் நகராது உறைந்துவிடும்

இவள் பூக்களின் வார்ப்பு
மல்லிகையும் முகரும் பூந்தோட்டம்
இவள் நற்காற்றின் தலைவி
மென்பட்டும் கட்டிக்கொள்ளும் தென்றல்
இவள் புன்னகையால் முறுவலிக்கும்
சுற்றமும் வெளியும் முக்காலமும் மூவுலகும்
மொத்தமாக காதல் கொண்டு என்னில் கலந்து
மாற்றிவிட்டால் காதலாக என்னையே

Thursday, September 01, 2011

நினைவுகள் (அல்லது) கண்டிப்பாய் ஞாபகமில்லை

எத்தனையோ நினைவுகளை நெஞ்சம் சுமக்கிறது
எழுத முடியாது எண்ணில் அடங்காது
கவி கோர்க்க சில குவியல்கள்
குப்பையாய் சில உணர்வில் உள்ளூரி

பிஞ்சு வயதில் பஞ்சு கரந்நீட்டி
பால்நிலா முற்றத்தில் அன்னை மடியமர்ந்து
பருப்புஞ்சாதம் உண்ட ஞாபகம்
பாசமுத்தம் கன்னம் கொண்ட ஞாபகம்

தூளியில் விழித்ததும் தாய் முகங்காணாது
தவிப்புடன் சிணுங்கிய ஞாபகம்
தொணி கேட்டு அடங்கிய ஞாபகம்
தந்தை முகங்காண விழித்திருந்த ஞாபகம்

பிள்ளையார் பொம்மையை தூக்கியெறிந்த ஞாபகம்
பருவமழையில் தோழியுடன் முழுதாய் நனைந்த ஞாபகம்
பள்ளி செல்ல மறுத்து தூணின்பின் ஒளிந்த ஞாபகம்
போராடி தோற்று அழுது (பள்ளி) சென்ற ஞாபகம்

பட்டம் விட்ட ஞாபகம் பாட்டு சொன்ன ஞாபகம்
திருக்கோயில் சென்று மாங்காய் பறித்த ஞாபகம்
புதுபுத்தகம் முகர்ந்து பார்த்த ஞாபகம்
திருட்டாய் பேனா பழகி முனை ஒடித்த ஞாபகம்

தந்தையில் சட்டையை நானணிந்த ஞாபகம்
தாத்தாவின் மொட்டையை முத்தமிட்ட ஞாபகம்
சைக்கிளேறி விழுந்து கால்சிறாய்த்த ஞாபகம்
சன்னலோர சீட்டிற்கு பேருந்தில் ஓடியேறிய ஞாபகம்

உலகை வெல்லக் கனவு கண்ட ஞாபகம்
உண்மையாய் வாழ உறுதி பூண்ட ஞாபகம்
காவியம் மேற் தீராக்காதல் கொண்ட ஞாபகம்
கவிஞனாய் சிலவரிகள் கிறுக்கி பார்த்த ஞாபகம்

கல்வியில் நானூறி இன்பம் தொய்த்த ஞாபகம்
கடவுள் மேல் பக்தியென்ற உண்மை தெளிந்த ஞாபகம்
கன்னியரை தேடி யலைந்தோடிய ஞாபகம்
குழந்தையாய் இன்னுமில்லை என்றுணர்ந்த ஞாபகம்

கல்விச்சந்தையில் வணிகம் செய்த ஞாபகம்
இலக்கை எட்டிவிட்டு இளைப்பாறிய ஞாபகம்
இளம்பருவத்தில் பலவுண்மைகள் தெரிந்த ஞாபகம்
கண்டிப்பாய் முன்னேற வெறிக் கொண்ட ஞாபகம்

இப்படியாய் ஞாபகங்கள் என்னில் கிடக்க
இன்று நினைவுகளை தொலைத்துவிடும் பயம் வந்ததேன்
கண்மணியே உனையென் ஞாபகத்தில் கொண்ட முதல்
கரைகிறது ஞாபகத்தில் நானொருவன் இருப்பதே !

இறைவா

காணும் காட்சியெல்லாம் கணபதியே
குன்றா ஞானத்தின் ஏகாதிபதியே
கருணை வடிவத்து கரிமுகனே
காத்திடுவாய் எமையே மகிழ்வுடனே

எங்கும் நிரந்தர அமைதி வேண்டி
இங்கு பணிந்துள்ளோம் உம்பாதம் தீண்டி
தங்கும் தலைச்செல்வம் பேரின்பத்தை
தடையின்றி தரணிக்கு தந்திடுவாய் தலைமகனே

பிரணவத்தின் பெரும்பொருளே சிவசக்தி புத்திரனே
பிரளய (பூமியின்) பரம்பொருளே பல்கலை வித்தகனே
விடியும் நாளெல்லாம் எமை வழிநடத்திச் செல்பவனே
வளையா புத்தியினை வித்திடுவாய் விநாயகனே

கசடற்ற கனிமொழி பேசி குலாவிடவே
மாசற்ற மாண்பு மண்ணில் செழித்திடவே
ஓர்தாய் மக்களாய் வாழ்ந்திடவே (பழகிடவே)
ஒப்பற்ற தலைவா உன்னிழல் வந்தடைந்தோம் !

Wednesday, August 31, 2011

அன்றே அடங்கியிருப்பேன்

ஆம் அன்றே அடங்கியிருப்பேன்
எனக்கு எதுவும் தெரிந்திருக்காது
தெரியாமல் அமைதியாதல் ஓர்சுகந்தான்
அறியாமலே இருந்திருக்கும் வலியும் கற்பனையும்
இலக்கற்ற பயணம் நிகழ்ந்திருக்கும்
இரந்திருக்க வேண்டாம் காலனுடன் வீணாக
இருளில் கலப்போமோ வென்று கலங்கியிருக்க வேண்டாம்
பூட்டிய அறையிலிருந்து புறப்பட்டெழும் காலம் போல்
பிரிந்து செல்லும் இவ்வுயிரும் காலன் அழைப்பால்
காற்றும் கதிரும் இன்றும் இருந்திருக்கும்
குடும்பமும் குழந்தையும் இவ்வுலகில் சுழலும்
சிறுசோகம் சேமிக்கப்பட்டிருந்தாலும்
பெரும்பாலும் போராட்டம் மறந்திருக்கும் !

இன்று இயங்குகிறேன் இறைவனின் இன்னருளால்
இனம் புரியா பயத்துடன் வாழ்கிறேன்
இப்பயம் நல்லது தான்
இல்லாதுபோயின் நல்லது நிகழுமோ?
இறைவனுக்கு ஆள்பவனுக்கு குடும்பத்திற்கு சகமனிதனுக்கு
இயற்கைக்கு அறியாமைக்கு ஏன் தனக்கும் பயந்ததே இவ்வுலகம்
அனைத்து முன்னேற்றமும் தற்பயன் தந்த கொடை
அதனால் வளர்ந்ததே நம்மறிவும் நாகரிகமும்

நீராடியவன் நரகலை தீண்டியது போல்
நெருப்பாடிய சீதையை வதைத்த கொடும்வார்த்தை போல்
தகாதவை புரிய தடுமாறுகிறேன் தவிர்க்கிறேன்
தவள்ந்த தடயங்கள் உயர்ந்ததா யமைய
தாளம் தப்பா திசைக்கிறேன் காலக்கருவியை!

Monday, August 29, 2011

நேரம் வாங்கலியோ நேரம் !

நேரம் விற்கப் புறப்பட்டேன்
நொடியாய் நிமிடமாய் நாழிகையாய் வகுத்துப்பிரித்து
வாங்கத்தான் எத்தனை மனித பிறவிகள்?
தரம் பார்த்தும் வாங்குவதில்லை
விற்கும் நான் உத்தரவாதமும் தருவதில்லை !

சிலருக்கு தேவையில்லைத் தான்
சிலருக்கு விற்கக்கூடாது தான்
வாங்கத்தகுதியுடையோரோ வரிசையில் வருவதில்லை
வியாபரமும் பேதம் பார்ப்பதில்லை

பந்தயக்காரனுக்கு நொடிகள் தேவை
மாணவனுக்கு தேர்வில் நிமிடங்கள் தேவை
பார்த்துப்பழகி மணமுடிக்க மாதங்கள் தேவை
மொத்தமாய் உயிர்வாழவென்றால் மேலும் சில வருடங்கள் தேவை

வளமை நீடிக்க காலத்தை தளையிடுவர் சிலர்
இளமையில் திளைக்க கடிகார முட்களை பின்னே திருப்புவர்
செங்கதிர் தாளை நீரில் நனைத்து கீழ்வானில் ஒட்டிடுவர்
சோர்ந்த வெண்ணிலவிற்கு சோறூட்டி மகிழும் சின்னஞ்சிறுவர்.

கழிவான பொருளிற்கும் கணக்கில்லாமல் காசெறியும் தொழிலிது
இருந்தும் சிலமணித்துகள்களை மலிவாக விற்கிறேன்
கறைபடிந்த நிமிடங்கள் வறுமை பிய்த்துப் போட்ட நிமிடங்கள்
ஈவிரக்கமற்ற நிமிடங்கள் பொறாமை நிமிடங்கள்

கண்ணீரில் கரைந்த அரைகுறை நிமிடங்கள் சுயநல நிமிடங்கள்
நோயில் நொடிந்த நிமிடங்கள் சிந்தை சிதைத்த நிமிடங்கள்
கண்மூடா துலர்ந்த நிமிடங்கள் காலன் களவாடிய இளமை நிமிடங்கள்
நசிந்து நூலான நிமிடங்கள் மேலும் வன்மம் பூசிய வறண்ட நிமிடங்கள்

இத்தனையும் பொறுக்க இங்கே தான் எத்துனை பேர்?
இங்கே வளமான மகிழ்வான நிமிடங்கள் கிடைப்பதுமில்லை விற்பதுமில்லை
கவிதை நிமிடங்களும் கசடற்ற கல்விப்பாகில் கலந்தூறிய நிமிடங்களும்
கடைவீதிக்கு எப்போதாவது வரும் குழந்தைகளின் புன்னகையில் உதிர்ந்து

குறைக்கொண்ட நேரத்துளிகளும் எளிதாய் கிடைப்பதில்லை
குற்றமுள்ள மணித்துளிகள் வாங்கும் மனிதனையே புரட்டிவிடும்
சிலப்பல காலத்துளிகள் கொண்டவனால் செம்மையடையும்
சரியாக விற்றால் ஆமைநாழிகள் அழகுறும்

சிலர் தம்மிடமுள்ள நொடியின் தரத்தை
சிந்தனையில் சிக்காயளவிற்கு உயர்த்தி விடுகிறார்கள்
சிறுகுவியலாய் நாழிகைகளமைத்ததன் மேற் தவம் புரியும் சிலர்
சாரைசாரையாகச் செல்லும் நேரத்தை வெறுமையில் நோக்குவர்

நிமிடங்களில் விலாசம் எழுதும் மனிதர்கள் பலர்
நமது கழிவை சுமக்கும் கழுதையாய் நிமிடங்கள் பல
எத்தனை நிமிடங்களின் பாடத்தை கற்பது
எத்தனை நிமிடங்கள் எமக்கு கருத்தரிக்க கூடாது?

போதுமென்ற மனம் இங்கேயும் வேண்டும் தான்
வாங்கிவந்த காலத்தில் வாழ்க்கையை அளந்தால்
பொழுதில் மனிதம் மலர்கிறது மேம்படுகிறது
விலைக்கொடுத்து நேரம் வாங்கும் வீண்ணெண்ணமறுகிறது

மொத்தமாய் காலமெங்கு கிடைக்கிறது வகுத்து விற்க
மெதுவாய் சேகரிக்க தேனீயிடம் பாடம் கற்கவா?
என்ன விலைக்கு விற்பது? எதனை விலையா யேற்பது?
என் விற்பனை முயற்சியில் எதையெழுதுகிறேன் நிமிடங்களில் ?

Thursday, August 25, 2011

எல்லாம் ஒன்று தான்

சூல் கொண்ட மேகமாய் சுற்றித் திரிந்தேன்
‘நான் யார்’ என்பது தெளிந்தறிந்து
எப்போது வெடித்து சிதறுவேன் என்றறியாமலே !
(சுழல் அற்ற பொழுது சிதறுவேனோ?)
*************************************************************************************

ஆளைப் புரட்டிவிட்டுத்தான் செல்கிறது
ஆழி விதியா வாழ்க்கையா எனும் விவாதங்கள் நடுவே
தத்தளித்து எழுந்திருக்கும் முயற்சி
தளர்வற்ற சுழற்சியில் தன் நிறுத்தம் நோக்கிய பயணத்தில்…
*************************************************************************************

கண்ணாமூச்சி விளையாட
களத்தில் இறக்கி விடப்பட்டேன்
நான் கேட்காமலே !
கண்டுபிடித்தேன் தட்டுத்தடுமாறி
கரையாத எங்குமோடி மறையாத வாழ்க்கையை
நான் அறியாமலே !!
*************************************************************************************

ஆயிரம் வேண்டுதல் பல்லாயிரம் நம்பிக்கை
புதுப்பொழுது புதுசுவாசம் புதிதாய் வாழ்வைப் பிரிக்கிறேன்
நன்றியுடன் பல கேள்விகளை ஒதுக்குகிறேன்
சாயும்முன் சென்றடையும் தூரம் சில காதமுள்ளது !
*************************************************************************************

மீண்டு ஒருமுறை வந்ததால்
மீண்டும் ஒருமுறை வாழ்வதால்
அன்னமாய் வாழ ஆசைக்கொள்கிறேன்
அப்படியே வாழ்வை ஏற்காமல்
அதன் அழகியலை மட்டும் விரும்புகிறேன்
தருமன் கண்கொண்டு தரணியை காண்கிறேன்
அள்ளி தெளிக்க விரும்புகிறேன் பொறுக்கிய நல்வித்தை
தளராது நகைத்திடாதோ இச்சகமும் சந்தடியும்?

தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை
தனலிடும் பொறிமட்டும் நெஞ்சோரமாய் பாதுகாப்பாய்!
*************************************************************************************

Wednesday, August 24, 2011

நானில்லாத ஒரு நாள்…..

Phone அடித்தது….

இன்று சரியாக தொலைப்பேசி அழைத்திருக்கும்
அழுகையுடன் யாரோ கூறுகிறார்கள்
நானில்லாத இக்கணத்தை!
அதிர்ச்சியுடன் எதிர்முனை நண்பன் நடுங்குகிறான்…

நம்ப தான் முடியவில்லை
நேரம் மறைத்து வைத்த குறிப்புகளை !
விரல் சொடுக்கும் வேகத்தில் வாழ்க்கை
பரபரப்பாய் தன் வழித்தடம் மாற்றிக்கொள்கிறதே !!

சோகம் சந்தோஷம் பயம் அழுகை என
சிறுச்சிறு பொதிகளில் உணர்ச்சிகள் அடைப்பட்டன
மண்ணிட்ட மரமாய் மாயமாய் மாறியிருந்தது
மனமிட்ட இறுக்கங்களும் மதியிட்ட வருத்தங்களும்

எனக்கென்ன கவலை ?
ஆன்மா விரித்து படர்ந்து கரைந்தேன்…

Phone அடித்தது….

தொலைப்பேசி எடுத்து நலம் விசாரித்தேன்
தப்பிய நிகழ்வுகளை எடுத்து வைக்கிறேன்
அதிர்ச்சியில் எதிர்முனை நண்பன் நடுங்குகிறான்…
ஆதரவாய் ஏதேதோ கூறுகிறான்
தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற உண்மை உறைக்கிறது
தேரையா என்ன தெளிவில்லாமல் தவிப்பதற்கு?

உரையாடல் முடிந்தவுடன்
உள்ளம் அசைப்போட்டது
தவறிப் போயிருந்த தருணத்தின்
தொலைப்பேசி அழைப்பை !

நிதர்சனம்

தினமும் பூக்கும் பூ தான்
தெருவோரம் இன்றும் பூத்திருந்தது
இன்று மட்டும் பூத்திராவிட்டால்
நிச்சயம் அழுதிருப்பேன் !!

பற்றற்ற பற்று


Detached Attachment....
மிகவும் கஷ்டம் தான் !
மெத்தனமாய் வாதாடி வந்துள்ளேன்
வாழ்ந்தும் பார்த்துள்ளேன்
பட்டும் படாமலிருத்தல்
தாமரை இலை நீர் தரித்தல்
இவையெல்லாம் பொய்யென புரிகிறது !!

செல்வமோ சுகமோ சார்ந்து சரிந்ததில்லை
ஈன்ற தாயாகட்டும் இணைந்த தந்தையாகட்டும்
வளர் உடன்பிறப்பாகட்டும் உறவுகளாகட்டும்
வாய்த்த நன்மனைவியாகட்டும் மற்றும் பலராகட்டும்
பற்றற்ற பற்று பறைவதில் வலித்ததில்லை !

நான் ஈன்ற மகவெனும் போதில்
என்னுயிரின் பிம்பத்தை எதிர் நோக்கும் போதில்
செந்தாமரை சிரிப்பில் என்நாள் உதிக்கும் போதில்
சிந்து மழலையே சங்கீதமாய் தாலாட்டும் போதில்

சாய்ந்து கணிணிப்பார்க்கையில் எம்கால் பிடித்து
சரியாது எழும் சின்னஞ்சிறு இலக்கியத்தை காணும் போது
ஒருகை எம் தொடை தட்டி மறுகை விரல் சூப்பும் கவிதை அரங்கேறும் போது
இளவேனிற் மாலை நேரத்தில் தொடர்ச்சியாய் எம் கரமழைத்து
இரு உதடு குவித்து உணவு கொள்ளும் பேரின்ப புதையலை பிரிக்கும் போது

பற்றற்ற பற்றின் பொருள் விளங்குவதில்லை
பற்றற்றான் தனியிரையென என்னில் விலகி நிற்கிறான்
வாழும் தாகம் அதிகமாகி அதில் மூழ்க
வாழ்வை வாரிக்குடிக்க என் இதயம் இசைக்கிறது !!