எத்தனையோ நினைவுகளை நெஞ்சம் சுமக்கிறது
எழுத முடியாது எண்ணில் அடங்காது
கவி கோர்க்க சில குவியல்கள்
குப்பையாய் சில உணர்வில் உள்ளூரி
பிஞ்சு வயதில் பஞ்சு கரந்நீட்டி
பால்நிலா முற்றத்தில் அன்னை மடியமர்ந்து
பருப்புஞ்சாதம் உண்ட ஞாபகம்
பாசமுத்தம் கன்னம் கொண்ட ஞாபகம்
தூளியில் விழித்ததும் தாய் முகங்காணாது
தவிப்புடன் சிணுங்கிய ஞாபகம்
தொணி கேட்டு அடங்கிய ஞாபகம்
தந்தை முகங்காண விழித்திருந்த ஞாபகம்
பிள்ளையார் பொம்மையை தூக்கியெறிந்த ஞாபகம்
பருவமழையில் தோழியுடன் முழுதாய் நனைந்த ஞாபகம்
பள்ளி செல்ல மறுத்து தூணின்பின் ஒளிந்த ஞாபகம்
போராடி தோற்று அழுது (பள்ளி) சென்ற ஞாபகம்
பட்டம் விட்ட ஞாபகம் பாட்டு சொன்ன ஞாபகம்
திருக்கோயில் சென்று மாங்காய் பறித்த ஞாபகம்
புதுபுத்தகம் முகர்ந்து பார்த்த ஞாபகம்
திருட்டாய் பேனா பழகி முனை ஒடித்த ஞாபகம்
தந்தையில் சட்டையை நானணிந்த ஞாபகம்
தாத்தாவின் மொட்டையை முத்தமிட்ட ஞாபகம்
சைக்கிளேறி விழுந்து கால்சிறாய்த்த ஞாபகம்
சன்னலோர சீட்டிற்கு பேருந்தில் ஓடியேறிய ஞாபகம்
உலகை வெல்லக் கனவு கண்ட ஞாபகம்
உண்மையாய் வாழ உறுதி பூண்ட ஞாபகம்
காவியம் மேற் தீராக்காதல் கொண்ட ஞாபகம்
கவிஞனாய் சிலவரிகள் கிறுக்கி பார்த்த ஞாபகம்
கல்வியில் நானூறி இன்பம் தொய்த்த ஞாபகம்
கடவுள் மேல் பக்தியென்ற உண்மை தெளிந்த ஞாபகம்
கன்னியரை தேடி யலைந்தோடிய ஞாபகம்
குழந்தையாய் இன்னுமில்லை என்றுணர்ந்த ஞாபகம்
கல்விச்சந்தையில் வணிகம் செய்த ஞாபகம்
இலக்கை எட்டிவிட்டு இளைப்பாறிய ஞாபகம்
இளம்பருவத்தில் பலவுண்மைகள் தெரிந்த ஞாபகம்
கண்டிப்பாய் முன்னேற வெறிக் கொண்ட ஞாபகம்
இப்படியாய் ஞாபகங்கள் என்னில் கிடக்க
இன்று நினைவுகளை தொலைத்துவிடும் பயம் வந்ததேன்
கண்மணியே உனையென் ஞாபகத்தில் கொண்ட முதல்
கரைகிறது ஞாபகத்தில் நானொருவன் இருப்பதே !
No comments:
Post a Comment