Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Tuesday, May 26, 2009

என்னவளைக் காண……

மனதில் அவள் முகம்
பரவசத்தில் பூரித்தது
என்னோடு இயற்கையும்
புதுத்தோரணம் வழியெலாம் !

சில மரங்களில் பல நிறங்கள்
பல மலர்களில் புது நிறங்கள் !!

பசும்பட்டிலாடும் மலைத்தோழி
சிந்தும் புன்னகையோ நீர்வீழ்ச்சி?
எந்த பிஞ்சுகள் கூட்டம்
பறக்க விட்டது இப்பஞ்சுமேக பட்டங்களை?
எந்த வோவியன் தெளித்தது
இப்பள்ளத்தில் படரும் பசு(ம்)மையை?
பஞ்சபூத இரசம் விதைத்து
அழகை பிரசவித்த தாயவள் யார்?

இளங்குளிர் தென்றலில்
என்னுணர்வு நனைந்தது
செங்கதிரின் ஓரப்பார்வையில்
என்னுணர்வு கிளர்ந்தது

மனங்கொண்ட என்னவள் முகங்காண
மரவிடுக்கில் கிரணங்கள் பாய்ந்தது
இளஞ்சூட்டை ஒற்றியெடுக்க
புது நிழற்படையும் பிறந்தது

புது சுவாசம்
புது உணர்வு
புது தெளிவு
சலனமற்ற மனம்
மவுனத்தில் கலந்த பேரானந்தம் !

சில மரங்களில் இளவுயிர்கள் !
பல மலர்களில் புது மணங்கள் !

என் மனைவியைக் காண விரைகிறேன் !

Sunday, May 10, 2009

ஆமி மாமா சோறு போடுங்க……..

ஆமி மாமா சோறு போடுங்க……..

மனிதத்தை மமதையால் வெட்டி கூரறுத்து
மாளும் மிச்சத்தை அனலிட்டு பொசுக்கும் மிருகத்தனம் !
பெற்ற வயிறு பதற அதிர்ச்சியில் மூச்சும் நிற்க
பிஞ்சுகளை பிண்டங்களாய் இரத்த சகதியில் தள்ளும் அரக்கத்தனம்!!

தாயின் தமக்கையின் கற்பை உறிந்தவனை அறியாது
தமிழ் தந்த மாமன் என்னும் உறவால் (பதத்தால்) விளிக்கும் கொடுமை !
ஒட்டிய வயிற்றிற்கு உணராது இரக்கும் கவளம்
ஒருபோதும் மரியாத எம்முணர்வு வளர்க்க ! உயிர் வளர்க்கவல்ல !!

தனியொருவனுக்கு உணவில்லை யெனில் சகத்தினையழித்த சமூகம்
தலைகுனிந்து தன்னெதிரியிடம் கையெந்தும் அவலம்
தரித்திரமென எட்டி உதைக்கிறான் உடைந்து போகிறோம்
தமிழச்சி கர்ப்பபை குப்பைத் தொட்டியா? பாழுஞ்சேறா?

வண்ணத்து பூச்சிகளை சுடுநீரில் அமிழ்த்தும் சோகம்
வண்ண மலர் மென்னிதழ் மீதமிலம் தெளிக்கும் நோவு
மனிதனை மன்னிக்கலாம் வெறி மிருகத்தை? அரக்கனை?
மதியும் மனமும் சிதைந்தவனை? கொலை பாதகனை?

ஒவ்வொரு மூச்சும் புயலாகலாம்; இடியாகலாம்
ஒவ்வொரு எம்மிதய துடிப்பும்; எமது
பார்வை நெருப்பாகலாம் கரங்களும் கால்களும்
பாதகா நீ பதறும் எமனாகலாம் என்றா

எம்மினத்தின் குழந்தைகளை கொல்கிறாய்?
உம்மினம் பூப்பல்லக்கில் பதவிசாய் பவனி வர
எம்கர்ப்பத்தை கிழித்து சிசுவை சிதைக்கிறாயே
பாலூட்டவும் முடியவில்லை இறுதி நீரூட்டவும் முடியவில்லை…

அகிம்சை அவசரத்திற்கு உதவாது அறியாதவனிடம் எடுபடாது
வல்லரசு நல்லரசு எல்லாம் முகம் திருப்பி நாள்பலவாகுது
தாய்மையின் தவிப்பே காய்ந்தயெம் உயிர்ப்பில் மிச்சம்
முடிந்த வரை போராடுவோம் எமது மூச்சுள்ள வரை !!