Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Wednesday, August 31, 2011

அன்றே அடங்கியிருப்பேன்

ஆம் அன்றே அடங்கியிருப்பேன்
எனக்கு எதுவும் தெரிந்திருக்காது
தெரியாமல் அமைதியாதல் ஓர்சுகந்தான்
அறியாமலே இருந்திருக்கும் வலியும் கற்பனையும்
இலக்கற்ற பயணம் நிகழ்ந்திருக்கும்
இரந்திருக்க வேண்டாம் காலனுடன் வீணாக
இருளில் கலப்போமோ வென்று கலங்கியிருக்க வேண்டாம்
பூட்டிய அறையிலிருந்து புறப்பட்டெழும் காலம் போல்
பிரிந்து செல்லும் இவ்வுயிரும் காலன் அழைப்பால்
காற்றும் கதிரும் இன்றும் இருந்திருக்கும்
குடும்பமும் குழந்தையும் இவ்வுலகில் சுழலும்
சிறுசோகம் சேமிக்கப்பட்டிருந்தாலும்
பெரும்பாலும் போராட்டம் மறந்திருக்கும் !

இன்று இயங்குகிறேன் இறைவனின் இன்னருளால்
இனம் புரியா பயத்துடன் வாழ்கிறேன்
இப்பயம் நல்லது தான்
இல்லாதுபோயின் நல்லது நிகழுமோ?
இறைவனுக்கு ஆள்பவனுக்கு குடும்பத்திற்கு சகமனிதனுக்கு
இயற்கைக்கு அறியாமைக்கு ஏன் தனக்கும் பயந்ததே இவ்வுலகம்
அனைத்து முன்னேற்றமும் தற்பயன் தந்த கொடை
அதனால் வளர்ந்ததே நம்மறிவும் நாகரிகமும்

நீராடியவன் நரகலை தீண்டியது போல்
நெருப்பாடிய சீதையை வதைத்த கொடும்வார்த்தை போல்
தகாதவை புரிய தடுமாறுகிறேன் தவிர்க்கிறேன்
தவள்ந்த தடயங்கள் உயர்ந்ததா யமைய
தாளம் தப்பா திசைக்கிறேன் காலக்கருவியை!

Monday, August 29, 2011

நேரம் வாங்கலியோ நேரம் !

நேரம் விற்கப் புறப்பட்டேன்
நொடியாய் நிமிடமாய் நாழிகையாய் வகுத்துப்பிரித்து
வாங்கத்தான் எத்தனை மனித பிறவிகள்?
தரம் பார்த்தும் வாங்குவதில்லை
விற்கும் நான் உத்தரவாதமும் தருவதில்லை !

சிலருக்கு தேவையில்லைத் தான்
சிலருக்கு விற்கக்கூடாது தான்
வாங்கத்தகுதியுடையோரோ வரிசையில் வருவதில்லை
வியாபரமும் பேதம் பார்ப்பதில்லை

பந்தயக்காரனுக்கு நொடிகள் தேவை
மாணவனுக்கு தேர்வில் நிமிடங்கள் தேவை
பார்த்துப்பழகி மணமுடிக்க மாதங்கள் தேவை
மொத்தமாய் உயிர்வாழவென்றால் மேலும் சில வருடங்கள் தேவை

வளமை நீடிக்க காலத்தை தளையிடுவர் சிலர்
இளமையில் திளைக்க கடிகார முட்களை பின்னே திருப்புவர்
செங்கதிர் தாளை நீரில் நனைத்து கீழ்வானில் ஒட்டிடுவர்
சோர்ந்த வெண்ணிலவிற்கு சோறூட்டி மகிழும் சின்னஞ்சிறுவர்.

கழிவான பொருளிற்கும் கணக்கில்லாமல் காசெறியும் தொழிலிது
இருந்தும் சிலமணித்துகள்களை மலிவாக விற்கிறேன்
கறைபடிந்த நிமிடங்கள் வறுமை பிய்த்துப் போட்ட நிமிடங்கள்
ஈவிரக்கமற்ற நிமிடங்கள் பொறாமை நிமிடங்கள்

கண்ணீரில் கரைந்த அரைகுறை நிமிடங்கள் சுயநல நிமிடங்கள்
நோயில் நொடிந்த நிமிடங்கள் சிந்தை சிதைத்த நிமிடங்கள்
கண்மூடா துலர்ந்த நிமிடங்கள் காலன் களவாடிய இளமை நிமிடங்கள்
நசிந்து நூலான நிமிடங்கள் மேலும் வன்மம் பூசிய வறண்ட நிமிடங்கள்

இத்தனையும் பொறுக்க இங்கே தான் எத்துனை பேர்?
இங்கே வளமான மகிழ்வான நிமிடங்கள் கிடைப்பதுமில்லை விற்பதுமில்லை
கவிதை நிமிடங்களும் கசடற்ற கல்விப்பாகில் கலந்தூறிய நிமிடங்களும்
கடைவீதிக்கு எப்போதாவது வரும் குழந்தைகளின் புன்னகையில் உதிர்ந்து

குறைக்கொண்ட நேரத்துளிகளும் எளிதாய் கிடைப்பதில்லை
குற்றமுள்ள மணித்துளிகள் வாங்கும் மனிதனையே புரட்டிவிடும்
சிலப்பல காலத்துளிகள் கொண்டவனால் செம்மையடையும்
சரியாக விற்றால் ஆமைநாழிகள் அழகுறும்

சிலர் தம்மிடமுள்ள நொடியின் தரத்தை
சிந்தனையில் சிக்காயளவிற்கு உயர்த்தி விடுகிறார்கள்
சிறுகுவியலாய் நாழிகைகளமைத்ததன் மேற் தவம் புரியும் சிலர்
சாரைசாரையாகச் செல்லும் நேரத்தை வெறுமையில் நோக்குவர்

நிமிடங்களில் விலாசம் எழுதும் மனிதர்கள் பலர்
நமது கழிவை சுமக்கும் கழுதையாய் நிமிடங்கள் பல
எத்தனை நிமிடங்களின் பாடத்தை கற்பது
எத்தனை நிமிடங்கள் எமக்கு கருத்தரிக்க கூடாது?

போதுமென்ற மனம் இங்கேயும் வேண்டும் தான்
வாங்கிவந்த காலத்தில் வாழ்க்கையை அளந்தால்
பொழுதில் மனிதம் மலர்கிறது மேம்படுகிறது
விலைக்கொடுத்து நேரம் வாங்கும் வீண்ணெண்ணமறுகிறது

மொத்தமாய் காலமெங்கு கிடைக்கிறது வகுத்து விற்க
மெதுவாய் சேகரிக்க தேனீயிடம் பாடம் கற்கவா?
என்ன விலைக்கு விற்பது? எதனை விலையா யேற்பது?
என் விற்பனை முயற்சியில் எதையெழுதுகிறேன் நிமிடங்களில் ?

Thursday, August 25, 2011

எல்லாம் ஒன்று தான்

சூல் கொண்ட மேகமாய் சுற்றித் திரிந்தேன்
‘நான் யார்’ என்பது தெளிந்தறிந்து
எப்போது வெடித்து சிதறுவேன் என்றறியாமலே !
(சுழல் அற்ற பொழுது சிதறுவேனோ?)
*************************************************************************************

ஆளைப் புரட்டிவிட்டுத்தான் செல்கிறது
ஆழி விதியா வாழ்க்கையா எனும் விவாதங்கள் நடுவே
தத்தளித்து எழுந்திருக்கும் முயற்சி
தளர்வற்ற சுழற்சியில் தன் நிறுத்தம் நோக்கிய பயணத்தில்…
*************************************************************************************

கண்ணாமூச்சி விளையாட
களத்தில் இறக்கி விடப்பட்டேன்
நான் கேட்காமலே !
கண்டுபிடித்தேன் தட்டுத்தடுமாறி
கரையாத எங்குமோடி மறையாத வாழ்க்கையை
நான் அறியாமலே !!
*************************************************************************************

ஆயிரம் வேண்டுதல் பல்லாயிரம் நம்பிக்கை
புதுப்பொழுது புதுசுவாசம் புதிதாய் வாழ்வைப் பிரிக்கிறேன்
நன்றியுடன் பல கேள்விகளை ஒதுக்குகிறேன்
சாயும்முன் சென்றடையும் தூரம் சில காதமுள்ளது !
*************************************************************************************

மீண்டு ஒருமுறை வந்ததால்
மீண்டும் ஒருமுறை வாழ்வதால்
அன்னமாய் வாழ ஆசைக்கொள்கிறேன்
அப்படியே வாழ்வை ஏற்காமல்
அதன் அழகியலை மட்டும் விரும்புகிறேன்
தருமன் கண்கொண்டு தரணியை காண்கிறேன்
அள்ளி தெளிக்க விரும்புகிறேன் பொறுக்கிய நல்வித்தை
தளராது நகைத்திடாதோ இச்சகமும் சந்தடியும்?

தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை
தனலிடும் பொறிமட்டும் நெஞ்சோரமாய் பாதுகாப்பாய்!
*************************************************************************************

Wednesday, August 24, 2011

நானில்லாத ஒரு நாள்…..

Phone அடித்தது….

இன்று சரியாக தொலைப்பேசி அழைத்திருக்கும்
அழுகையுடன் யாரோ கூறுகிறார்கள்
நானில்லாத இக்கணத்தை!
அதிர்ச்சியுடன் எதிர்முனை நண்பன் நடுங்குகிறான்…

நம்ப தான் முடியவில்லை
நேரம் மறைத்து வைத்த குறிப்புகளை !
விரல் சொடுக்கும் வேகத்தில் வாழ்க்கை
பரபரப்பாய் தன் வழித்தடம் மாற்றிக்கொள்கிறதே !!

சோகம் சந்தோஷம் பயம் அழுகை என
சிறுச்சிறு பொதிகளில் உணர்ச்சிகள் அடைப்பட்டன
மண்ணிட்ட மரமாய் மாயமாய் மாறியிருந்தது
மனமிட்ட இறுக்கங்களும் மதியிட்ட வருத்தங்களும்

எனக்கென்ன கவலை ?
ஆன்மா விரித்து படர்ந்து கரைந்தேன்…

Phone அடித்தது….

தொலைப்பேசி எடுத்து நலம் விசாரித்தேன்
தப்பிய நிகழ்வுகளை எடுத்து வைக்கிறேன்
அதிர்ச்சியில் எதிர்முனை நண்பன் நடுங்குகிறான்…
ஆதரவாய் ஏதேதோ கூறுகிறான்
தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்ற உண்மை உறைக்கிறது
தேரையா என்ன தெளிவில்லாமல் தவிப்பதற்கு?

உரையாடல் முடிந்தவுடன்
உள்ளம் அசைப்போட்டது
தவறிப் போயிருந்த தருணத்தின்
தொலைப்பேசி அழைப்பை !

நிதர்சனம்

தினமும் பூக்கும் பூ தான்
தெருவோரம் இன்றும் பூத்திருந்தது
இன்று மட்டும் பூத்திராவிட்டால்
நிச்சயம் அழுதிருப்பேன் !!

பற்றற்ற பற்று


Detached Attachment....
மிகவும் கஷ்டம் தான் !
மெத்தனமாய் வாதாடி வந்துள்ளேன்
வாழ்ந்தும் பார்த்துள்ளேன்
பட்டும் படாமலிருத்தல்
தாமரை இலை நீர் தரித்தல்
இவையெல்லாம் பொய்யென புரிகிறது !!

செல்வமோ சுகமோ சார்ந்து சரிந்ததில்லை
ஈன்ற தாயாகட்டும் இணைந்த தந்தையாகட்டும்
வளர் உடன்பிறப்பாகட்டும் உறவுகளாகட்டும்
வாய்த்த நன்மனைவியாகட்டும் மற்றும் பலராகட்டும்
பற்றற்ற பற்று பறைவதில் வலித்ததில்லை !

நான் ஈன்ற மகவெனும் போதில்
என்னுயிரின் பிம்பத்தை எதிர் நோக்கும் போதில்
செந்தாமரை சிரிப்பில் என்நாள் உதிக்கும் போதில்
சிந்து மழலையே சங்கீதமாய் தாலாட்டும் போதில்

சாய்ந்து கணிணிப்பார்க்கையில் எம்கால் பிடித்து
சரியாது எழும் சின்னஞ்சிறு இலக்கியத்தை காணும் போது
ஒருகை எம் தொடை தட்டி மறுகை விரல் சூப்பும் கவிதை அரங்கேறும் போது
இளவேனிற் மாலை நேரத்தில் தொடர்ச்சியாய் எம் கரமழைத்து
இரு உதடு குவித்து உணவு கொள்ளும் பேரின்ப புதையலை பிரிக்கும் போது

பற்றற்ற பற்றின் பொருள் விளங்குவதில்லை
பற்றற்றான் தனியிரையென என்னில் விலகி நிற்கிறான்
வாழும் தாகம் அதிகமாகி அதில் மூழ்க
வாழ்வை வாரிக்குடிக்க என் இதயம் இசைக்கிறது !!