வந்த வேகத்தில் வாசலுக்கு ஓடினான்
கைநிறைய அள்ளி வந்த வெயில்
தொலைந்து விட்ட சோகத்தில்
அன்று முற்றம் வழியாக
தரையில் படர்ந்த வெயில்
மெதுவாய் அறையில்
எதையோ துழாவியது
பிறிதொரு நாள்
எங்கோ ஒளிந்திருந்த
கண்ணாடித்துண்டுகள் விழுங்கி
சுவரில் துப்பிய வட்டவட்ட
வெயிலின் மிச்சத்தை
இருவிரல்களால்
பொறுக்கி கொண்டிருந்தான்
சிறுவயதில்
ஓலைக்குடிசையில்
பலமுறை படுத்திருக்கிறேன்
யாரோ அள்ளித்தெறித்த
வெயில் நட்சத்திரங்களின் மேல்
உருளையாய் வானிலிருந்து
வெளிச்ச கயிறுகள்
கூரையைக் கிழித்து தொங்கும்
தூசிகளை துலக்கி
அறையை சுத்தமாக்கும் போல
அண்ணாந்துப் பார்த்தால்
யாரோ அப்பளமாய்
நொறுக்கிப் போட்ட
வானம்
கூரை மேல்!
No comments:
Post a Comment