Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Monday, September 05, 2011

என் பேர் வீடு

காணி நிலத்திலே காய்கனி கூட்டத்திலே
காலூன்றிய கருங்கல் கட்டடம் அல்ல நான்
நினைவுகளை தலைமுறைகளாக பதப்படுத்திய பெட்டகம்
நாள்தோறும் சொந்தங்களில் தோய்ந்தெழும் சிறுதவம்

நான் வீடா? குடும்பமா?
என் பெயர் வீடு

நானொரு அரசாட்சி பாரம்பரியம் என் நீதி
சமூகத்தை பிரசவிக்கிறேன் சரித்திரத்தை இயற்றுகிறேன்
நீவிர் புரியாமல் தவிக்கும் மறைப்பொருள் நான்
சந்தத்தில் (இல்லை சொந்தத்தில்) இணைந்த சிறு சங்கதி நான்

நான் யார்?
என் பேர் வீடு

பூமித்தாயின் தலைப்புதல்வி நாகரிகத்தின் அளவுகோல்
பூத்துகுலுங்கும் செடிகொடிகள் அணிகலன் அங்கே
தவழும் மழலைகள் எம் குழந்தைகள்
தவறாமல் தாலாட்டி கனவுகளை விதைக்கிறேன்

நான் வீடா? தாயா?
என் பேர் வீடு

நான் தாயின் கண்ணீர் தளும்பிய அன்பு
தந்தையின் சுமை தளராத திடம்
தலைவனின் தூய்மை மறவனின் மாண்பு
நன்மக்களின் பேருறவு மொத்ததில் கோயில்

நான் யார்?
என் பேர் வீடு

கோடையில் கொல்லையிலும் திருவிழா சடங்குகளிலும்
கூட்டமாய் குதூகலிப்புடன் கும்மாளமிடுகிறேன்
கொண்டாட்ட பூரிப்பில் வசந்த கால தருக்களை மிஞ்சுகிறேன்
கருவறைக் குழந்தைக்கும் மனிதத்தை ஊட்டுகிறேன்

நான் பேருவகையின் மொத்த உருவமா?
என் பேர் வீடு

குடும்பத்தில் நான் பாதி; நீங்கள் மீதி;
தைதோறும் தோரணம் கட்டி திகழ்கிறேன்
கார்த்திகையில் ஒளியேந்தி நிற்கிறேன்
தப்பாது சித்திரையில் உம்மை வாழ்த்துகிறேன்

நான் மூப்பில்லா மூதாதை
என் பேர் வீடு

வித்தகரும் வெளியேறாத பல்கலைக்கழகம் நான்
அத்தனை செயல்களின் மொத்த பட்டறை நான்
ஏதோ ஒன்று என்னுள்ளம் அரிக்கிறது
என் வயதை சொல்கிறது தலைமுறை இடைவெளி யென்கிறது

கட்டில் பிரியா முதிர்கிழம் வாசலிலே
முற்றத்தில் முடைந்து கிடக்கும் தந்தை
சிங்கார நகரத்திலே செல்வத்திற்கு சென்ற சின்னப்பிள்ளை
சிகாகோ சென்றவனோ அவனுடைய பிள்ளை

தலைமுறைகள் ஏனோ திசைக்கொருவராய்
கொஞ்சம் கொஞ்சமாய் விலகி கடல் கடந்து விட்டது வாரிசுகள்
தலைமேற் கொண்ட சுமையால் வீடு வந்து வருடங்கள் ஆயிற்று
களிப்பிற்கு செல்வமீட்ட சென்றவர்கள் நிறைவிழந்து களைத்து விட்டார்கள்

சாதிக்க சென்ற திசை ஒரு வழி பாதையா?
தத்தம் மைந்தரை எதிர்நோக்கி பெற்றவர்கள்
மொத்தக் குடும்பத்தைப் ஒன்றாகப் பார்க்கத் துடிப்பதோ
காலத்தால் காரை விழுந்த பழைய கட்டடம்

வருவாயா என் செல்வங்களே
என விசும்பும்
நான் யார்?
கட்டடமா? வீடா?

No comments: