Welcome to my Blog

I would like to talk mostly about simple little beautiful things here..... General stuffs, Chemical engineering, Psychology, Humanity, people and politics, Things I have heard, read, seen, interpreted and understood will be discussed. Info on Tamil and some of my poems will be published.

Monday, August 29, 2011

நேரம் வாங்கலியோ நேரம் !

நேரம் விற்கப் புறப்பட்டேன்
நொடியாய் நிமிடமாய் நாழிகையாய் வகுத்துப்பிரித்து
வாங்கத்தான் எத்தனை மனித பிறவிகள்?
தரம் பார்த்தும் வாங்குவதில்லை
விற்கும் நான் உத்தரவாதமும் தருவதில்லை !

சிலருக்கு தேவையில்லைத் தான்
சிலருக்கு விற்கக்கூடாது தான்
வாங்கத்தகுதியுடையோரோ வரிசையில் வருவதில்லை
வியாபரமும் பேதம் பார்ப்பதில்லை

பந்தயக்காரனுக்கு நொடிகள் தேவை
மாணவனுக்கு தேர்வில் நிமிடங்கள் தேவை
பார்த்துப்பழகி மணமுடிக்க மாதங்கள் தேவை
மொத்தமாய் உயிர்வாழவென்றால் மேலும் சில வருடங்கள் தேவை

வளமை நீடிக்க காலத்தை தளையிடுவர் சிலர்
இளமையில் திளைக்க கடிகார முட்களை பின்னே திருப்புவர்
செங்கதிர் தாளை நீரில் நனைத்து கீழ்வானில் ஒட்டிடுவர்
சோர்ந்த வெண்ணிலவிற்கு சோறூட்டி மகிழும் சின்னஞ்சிறுவர்.

கழிவான பொருளிற்கும் கணக்கில்லாமல் காசெறியும் தொழிலிது
இருந்தும் சிலமணித்துகள்களை மலிவாக விற்கிறேன்
கறைபடிந்த நிமிடங்கள் வறுமை பிய்த்துப் போட்ட நிமிடங்கள்
ஈவிரக்கமற்ற நிமிடங்கள் பொறாமை நிமிடங்கள்

கண்ணீரில் கரைந்த அரைகுறை நிமிடங்கள் சுயநல நிமிடங்கள்
நோயில் நொடிந்த நிமிடங்கள் சிந்தை சிதைத்த நிமிடங்கள்
கண்மூடா துலர்ந்த நிமிடங்கள் காலன் களவாடிய இளமை நிமிடங்கள்
நசிந்து நூலான நிமிடங்கள் மேலும் வன்மம் பூசிய வறண்ட நிமிடங்கள்

இத்தனையும் பொறுக்க இங்கே தான் எத்துனை பேர்?
இங்கே வளமான மகிழ்வான நிமிடங்கள் கிடைப்பதுமில்லை விற்பதுமில்லை
கவிதை நிமிடங்களும் கசடற்ற கல்விப்பாகில் கலந்தூறிய நிமிடங்களும்
கடைவீதிக்கு எப்போதாவது வரும் குழந்தைகளின் புன்னகையில் உதிர்ந்து

குறைக்கொண்ட நேரத்துளிகளும் எளிதாய் கிடைப்பதில்லை
குற்றமுள்ள மணித்துளிகள் வாங்கும் மனிதனையே புரட்டிவிடும்
சிலப்பல காலத்துளிகள் கொண்டவனால் செம்மையடையும்
சரியாக விற்றால் ஆமைநாழிகள் அழகுறும்

சிலர் தம்மிடமுள்ள நொடியின் தரத்தை
சிந்தனையில் சிக்காயளவிற்கு உயர்த்தி விடுகிறார்கள்
சிறுகுவியலாய் நாழிகைகளமைத்ததன் மேற் தவம் புரியும் சிலர்
சாரைசாரையாகச் செல்லும் நேரத்தை வெறுமையில் நோக்குவர்

நிமிடங்களில் விலாசம் எழுதும் மனிதர்கள் பலர்
நமது கழிவை சுமக்கும் கழுதையாய் நிமிடங்கள் பல
எத்தனை நிமிடங்களின் பாடத்தை கற்பது
எத்தனை நிமிடங்கள் எமக்கு கருத்தரிக்க கூடாது?

போதுமென்ற மனம் இங்கேயும் வேண்டும் தான்
வாங்கிவந்த காலத்தில் வாழ்க்கையை அளந்தால்
பொழுதில் மனிதம் மலர்கிறது மேம்படுகிறது
விலைக்கொடுத்து நேரம் வாங்கும் வீண்ணெண்ணமறுகிறது

மொத்தமாய் காலமெங்கு கிடைக்கிறது வகுத்து விற்க
மெதுவாய் சேகரிக்க தேனீயிடம் பாடம் கற்கவா?
என்ன விலைக்கு விற்பது? எதனை விலையா யேற்பது?
என் விற்பனை முயற்சியில் எதையெழுதுகிறேன் நிமிடங்களில் ?

No comments: