பெண்ணே,
முன்னிலும் உன்மேல் மதிப்பு கூடுகிறது
தாயாய், தோழியாய், சகோதரியாய் படும்பாட்டில்
என்னாவி சுருங்கி குருதி கொதிக்கிறது
தளர்மரம் நீயென்றால் தரிசு பாறை நான் !
இவ்வுலகில் நானிருந்தேன் என்பது வெட்கம்
இறைச்சியாய் உண்டார்களோ இறையாண்மை இயல்நிலையை?
இவ்விரல்கள் நீளவில்லை நின்கண்ணீர் களைய
இரும்புமதிலை நொறுக்கவில்லை எம்கரங்கள்
இந்தவாயோ வாய்மை வாதாடவில்லை
எம்மதி வெல்லுஞ்சூதனம் வகுக்கவில்லை
இதயம் மட்டும் ஈரம் சுரந்தால் சரியா
இவ்வுடல் தமிழுரம் கொண்டு வெடிக்கவில்லை ! விதையாகவில்லை!
கலப்பினம் காண கற்பை கொள்ளை கொண்டாரே
கொடுமையின் உச்சமிது ! யுகங்களின் கல்கியும் இதுவே
தாய்மைக்கும் தமிழ்மைக்கும் தடுமாற்றம் தந்தாரே
தனியே போராடி தவிக்க துணை பிரித்து சேய் மாய்த்தரே !
வேண்டாம்…….
வேதங்கள் இயம்பும் யுகமுடிவெங்கே?
நீராலோ நெருப்பாலோ உலகம் மடிந்தொழியட்டும்
அநீதிக்கெதிராய் பொங்கியெழா விடின்
அந்நியம் தான் நீவிர் எமக்கு – ஆண்டவனே ஆயினும் !!